டெல்லி: மழையால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ள கேரள மக்களுக்கு உதவுங்கள் என மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டு உள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக எர்ணாகுளம் திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 3நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால்,  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த நிலையில், கேரள மக்களை கவனமுடன் இருக்கும்படி காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கனமழை பெய்து வரும் கேரளாவில் நமது சகோதர, சகோதரிகள் துணிவுடன் இருக்கிறார்கள். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்  அனைவரும் கவனமாகவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றி இருங்கள் என்றும்,  மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் எல்லா வகையிலும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.