டெல்லி: சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது எப்போது என கேள்வி எழுப்பிய உறுப்பினருக்கு பதில் அளித்த மத்தியஅமைச்சர், அந்த திட்டம் ஆய்வில் இருப்பதாக பதில் கூறினார்.

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அம்மாநில எம்.பி.  ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். சபரிமலை அருகிலேயே விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலன்பெற முடியும், அதனால் அதற்கான முயற்சிகளை விரைவில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த விமானப்போக்குவரத்துத் துறை இணைஅமைச்சர் வி.கே.சிங், உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கேரள மாநில அரசு சார்பல், சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கேரள அரசின் கேரள மாநில தொழில் வளர்ச்சி கழகம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது திட்டத்தை சமர்ப்பித்தது. அதுகுறித்து விமான நிலையங்கள் ஆணையம், விமான போக்குவரத்து இயக்குநரகம், ராணுவ அமைச்சகம், கேரள தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த அமைப்புகள் தெரிவித்த கருத்துகளின்படி, தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள தொழில் வளர்ச்சி கழகத்திடம் கோரினோம். அந்த அறிக்கை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் நடந்த விமான நிலையங்களுக்கான வழிகாட்டு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, நிலம் இருப்பு, வில்லங்கத்தை அகற்றுதல் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை கேரள தொழில் வளர்ச்சி கழகத்திடம் கேட்டோம். அந்த தகவல்களை கடந்த டிசம்பர் மாதம் அளித்தது. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம் என்று வி.கே.சிங் பதிலளித்தார்.

தற்போது வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வருபவர்கள் விமானம் மூலம், கொச்சி, திருவனந்தபுரம்  விமான நிலையங்களுக்கு வந்து, அங்கிருந்த பலமணி நேரம் வாகனப்பயணம் மேற்கொண்டுதான் சபரிமலை அடைய வேண்டியது உள்ளது. இதனால், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை பகுதியில்  விமான நிலையம் அமைத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த ஆண்டு,  சபரிமலை எருமேலி அருகே புதிய விமான நிலையம் அமைக்க மத்திய நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து சபரிமலை அருகே எருமேலி தெற்கு, மணிமலை ஆகிய இடங்களில் 2,570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட ஆய்வு பணியை அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்ய இருக்கிறது. புதிய விமான நிலையம் 3,500 மீட்டர் விமான ஓடுபாதையுடன் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் ஏற்கனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. எனவே 5-வதாக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைய உள்ளது.