பாஜக.வில் சேர பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு நிர்பந்தம்!! டில்லி ரியான் பள்ளி மீது புகார்

Must read

டில்லி:

டில்லியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை பாஜக.வில் இணைய நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டில்லி குர்கான் பகுதியில் ரியான் சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் நேற்று பள்ளியின் கழிப்பிடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பள்ளியின் நிர்வாகம் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோரை பாஜக.வில் இணையுமாறு நேரடியாக நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணைய மறுத்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்தாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரேஸ் பின்டோ கூறுகையில்,‘‘ பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் மேற்கொண்டது உண்மை தான். ஆனால் இது முழுக்க முழுக்க தன்னார்வ அடிப்படையிலேயே மேற்கொண்டது. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை’’ என்றார். டில்லி பாஜக மகளிரணி தலைவர் கமல்ஜித் செராவத் கூறுகையில், ‘‘பின்டோ தற்போது பாஜக மகளிரணி தேசிய செயலாளராக உள்ளார்’’ என்றார்.

இது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர் கூறுகையில், ‘‘எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டது. இலவச போன் நம்பர் 18002662020 அந்த தகவலில் அனுப்பி, இந்த நம்பரை அழைத்து பாஜக உறுப்பிராக சேரும் படி கேட்டுக் கொண்டனர். இந்த நம்பருக்கு அழைத்தால் பாஜக.வில் சேர் ந்ததற்கான உறுப்பினர் எண் வருகிறது. இந்த எண்ணை நிர்வாகத்திடம் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவி க்குமாறு வலியுறுத்தப்பட்டது’’ என்றனர்.

பள்ளியில் இதர கிளைகளில் பணியாளர், ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘இங்கு பணியாற்றும் மூத்த ஆசிரியர் முதல் தோட்டக்காரர் வரையில் அனைவரும் 10 நபர்களை கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பாஜக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பமும் விநியோகம் செய்யப்பட்டது. இலவச அழைப்பு எண் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்டது.

இதற்கான அறிவிப்பு காலை அசெம்ப்ளியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்கப்படாததால் கடந்த மார்ச் மாதம் சம்பளம் நிறுத்தப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்கினால் தான் சம்பளம் வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தது ’’ என்றார்.

நாடு முழுவதும் இப்பள்ளிக்கு 133 பள்ளிகள் உள்ளன. இதில் 2 லட்சம் மாணவ மாணவிகள் பயில்கின்றனர். 1976ம் ஆண்டு இப்பள்ளி முதன் முதலாக மும்பையில் தொடங்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் நடந்துள்ளதாக டில்லி ரோகினி கிளை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

 

 

More articles

Latest article