மாஸ்கோ

ரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன.    இந்த தடுப்பூசிகளைப் பல நாட்டு நிறுவனங்கள் கண்டறிந்து தயாரித்து வருகின்றன.  இவை அனைத்தும் இரண்டு டோஸ்களாக மக்களுக்குப் போடப்படுகின்றன.   இதனால் கொரோனாவை தடுக்கும் திறன் ஒரே நேரத்தில் கிடைப்பதில்லை.

ரஷ்யாவில் ஏற்கனவே ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசி மருந்துக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இந்த தடுப்பூசியும் இரண்டு டோஸ்களாக போடப்படும் மருந்தாகும்.  தற்போது இதே நிறுவனம் ஸ்புட்னிக் லைட் என்னும் தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடித்து சோதனை செய்துள்ளது.   இது மற்ற மருந்துகள் போல இல்லாமல் ஒரே டோஸ் போட்டால்  போதுமானதாகும்.

இந்த மருந்து ரஷ்யாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது.  இதில் கொரோனா நோய்க்கு எதிராக ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 79.4% வெற்றிகரமாகச் செயல்படுவதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த மருந்து அனைத்து வகையான உருமாற்ற வகைகளுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையொட்டி ரஷ்ய அரசு ஒரே டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.    இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் சீரிய அளவில் உள்ளதாக ரஷ்யத் தொற்று மற்றும் நுண்கிருமிகள் ஆய்வுக் கூட தலைவர் அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பர்ட் தெரிவித்துள்ளார்.