26 வருடங்களாக வீட்டுச் சிறை..  பூனைகளோடு வளர்க்கப்பட்ட பெண்..
ரஷ்யாவைச் சேர்ந்தவர் 42 வயதான நடேஷ்தா புஷுவேவா.  சமீபத்தில் இவரது தாயின் வயோதிகம் காரணமாக உடல்நிலை மோசமாகி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது தான் நடேஷ்தா புஷுவேவாவிற்கு கடந்த 26 வருடங்களாக நடந்த கொடுமை வெளியே தெரிந்துள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்டவராகச் சந்தேகிக்கப்படும் தாய் இவரை அவரது 16-வது வயதிலிருந்தே, ‘வெளியுலகம் மிக மிக ஆபத்தானது, மோசமானது’ எனக் காரணம் கூறி தனது குடியிருப்பில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்காமல் வீட்டினுள்ளேயே பூட்டி வைத்து வளர்த்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது 42 வயதாகும் நடேஷ்தா, 26 வருடங்கள் கழித்து தற்போது தான் தனது குடியிருப்பை விட்டு வெளியில் வந்துள்ளார். தாயின் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்த அவர் ஒரு போதும் குடியிருப்பில் இருந்து வெளியில் வருவதற்கு முயற்சிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இவரது வீட்டில் எலிகளும் பூனைகளும் அதிக அளவில் காணப்பட்டுள்ளது. தாயும் மகளும் 26 வருடங்களாக ஒரே படுக்கையில் படுத்து உறங்கியுள்ளனர். மகளுக்குப் பூனைகளுக்குக் கொடுக்கும் உணவையே கொடுத்து வந்துள்ளார் அந்த தாய்.  அதுமட்டுமன்றி 2006-லிருந்து இவர் குளித்ததே இல்லையாம்.
“என் வாழ்க்கை இந்த பூனைகளின் வாழ்க்கையை விட மிகவும் மோசமாக அமைந்து விட்டது அவற்றுக்கு இருக்கும் உரிமைகள் கூட எனக்கு இல்லை.  நான் இப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதற்குக் கூட என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. நான் இப்போது நடைப்பிணமாகத் தான் உள்ளேன்” என்று அதிகாரிகளிடம் அழுதபடியே சொன்ன நடேஷ்தா தனக்கென்று ஒரு அடையாளத்தையும் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
– லெட்சுமி பிரியா