சிலான்பினார், துருக்கி

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் அமெரிக்க ராணுவம் இருந்த இடத்துக்கு ரஷ்ய ராணுவம் சென்றுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அடக்க அமெரிக்கா மற்றும் ரஷ்ய ராணுவத்தினர் அரசுக்கு உதவி செய்து வந்தனர்.  தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில்  அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது.  துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் இருந்த குர்து இனப் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வந்தது.

அமெரிக்கப்படை திரும்பியதையொட்டி குர்துக்கள் மீது துருக்கி தொடர்ந்து 7 நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இதனால் சுமார் ஒரு லட்சம் குர்துக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு ஓடி விட்டனர்.   பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.    தங்களைக் காக்க குர்துக்கள் சிரியாவுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலயில் சிரியாவுக்கு ஆதரவாக இருந்து வந்த ரஷ்யா தனது ராணுவ வீரர்களை துருக்கி மற்றும் சிரியா எல்லைக்கு அனுப்பி உள்ளது.  இந்தப் பகுதியில் ஏற்கனவே அமெரிக்க வீரர்கள் இருந்து வந்தனர்.   தற்போது அமெரிக்கா தனது ராணுவத்தைத் திரும்பப் பெற்ற நிலையில் அந்த இடத்துக்கு ரஷ்ய ராணுவம் விரைந்துள்ளது.