வாஷிங்டன்

பாகிஸ்தானின் ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் அரசின் சட்ட அமலாக்க முகமை அந்நாட்டில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா ஆகிய அமைப்புக்களின் நான்கு தலைவர்களைக் கைது செய்தது.  இவர்கள் பேராசிரியர் ஜாபர் அக்பால், யாகியா அஜிஸ், முகமது அஷ்ரஃப், மற்றும் அப்துல் சலாம் ஆவார்.  பாகிஸ்தானின் இந்த கைது நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்று உள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் மத்திய மற்றும் தெற்காசிய பணியக தலைவர் ஆலிஸ் வெல்ஸ், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதைப் போல் அந்நாட்டின் எதிர்காலத்துக்காகத் தீவிரவாதக் குழுக்கள் செயல்படுவதைத் தடுக்க வேண்டும்.  அந்நாட்டில் லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 4 தலைவர்கள் கைது செய்ததை நாங்கள் வரவேற்கிறோம்.   லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபிஸ் சையத் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் மீதும் அரசு வழக்கு தொடர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதால் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புக்கள் அந்நாட்டை கிரே பட்டியலில் வைத்துள்ளது.  இந்த நடவடிக்கை தொடர்ந்தால் பாகிஸ்தான் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   அந்த அமைப்புக்கள் அளித்த கெடுவை ஒட்டி இந்த கைது நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது.