சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இதுகுறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 19996 முதல் 2011ம் அண்டு வரை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்தவரையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கே சேர்த்து தான் தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், தற்போது ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுகிறது. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. மேலும், ஊராட்சி உறுப்பினர்கள், தலைவர் பதவிகளில் போட்டியிட அரசியல் கட்சிகள் அனுமதிக்கப்படாத நிலையில், பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து பதவிகளில் போட்டியிட அரசியல் கட்சிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி முடிவுகளை அறிவிக்கக்கூடாது.

சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு பல கட்ட தேர்தல் நடந்தாலும் ஒரே நாளில் தான் முடிவு அறிவிக்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் இதுகுறித்து, தான் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என பதில் தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே, வாக்குப் எண்ணிகையை நிறுத்திவைக்க வேண்டும்  என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கை வரும் 30ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.