மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், உள்நாட்டு பங்குகளின் எதிா்மறையான போக்கு போன்ற காரணங்களால் முதலீட்டாளா் களின் ஆா்வம் வெள்ளிக்கிழமை குறைந்துபோனது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை 82.19-இல் தொடங்கியது. அது, அதிகபட்சமாக 82.43 வரை கீழிறங்கி 82.32-இல் நிலைபெற்றது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று,  வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும், 39 காசுகள் வீழ்ச்சியடைந்து 82.69 ஆக உள்ளது. இந்தத் தொடர் ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்கள், உதிரிப்பாகங்கள், உற்பத்தி பொருட்கள், மென்பொருள், சேவைகள், மொபைல் போன்கள் போன்ற அனைத்து பொருட்களின்  விலையும் அதிகரிக்க  வாய்ப்பு உள்ளது.

இன்றைய ரூபாய் மதிப்பு சரிவுக்கு என்ன காரணம், ஏற்கனவே ஆர்பிஐ டாலர் ஆதிக்கத்தைக் குறைக்க அதிகப்படியான டாலரை வெளிச் சந்தையில் விற்பனை செய்யத் துவங்கிய நிலையில் மீண்டும் ரூபாய் மதிப்புச் சரிவு எதனால் ஏற்பட்டது. திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82.6725 அளவுடன் துவங்கி 82.69.50 வரையில் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82.33 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைப் பதிவு செய்துள்ளது, அதிலும் குறிப்பாகக் கடந்த 10 நாட்களில் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை இந்திய ரூபாய் மதிப்புப் பதிவு செய்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக விளங்குவது OPEC+ அறிவிப்புக்குப் பின்பு கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள், பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீடுகள், கார்பரேட் நிறுவனங்கள் அதிகப்படியான முதலீடுகளை வெளியேற்றியது, டாலருக்கான தேவை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகரித்துள்ள காரணத்தால் அனைத்தும் ரூபாய் மதிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய – உக்ரைன் போருக்கு பின்பு இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பின் அன்னிய செலாவணிகளைச் செலவு செய்துள்ளது. ஆனாலும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

இந்தத் தொடர் ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்கள், உதிரிப்பாகங்கள், உற்பத்தி பொருட்கள், மென்பொருள், சேவைகள் ஆகிய அனைத்தின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.