சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பேஸ்புக் தமிழச்சி எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்து, தானும் அதே போல் பதிவுகள் இட்ட பாதிரியார் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்  நலம் பாதிக்கப்பட்டு  கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அது முதல் அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் முதல்வர் இருப்பதாகவும், அவரது உயிர்த்தோழி சசிகலா மட்டும் உடனிருந்து கவனித்துக்கொள்வதாகவும் கூறப்பட்டது.

ஆண்டனி ஜேசுராஜ்  -  தமிழச்சி
ஆண்டனி ஜேசுராஜ் – தமிழச்சி

இந்த நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த காவல்துறை 53 பேர் மீது வழக்கு பதிந்தது. வதந்தி பரப்பியதாக சதீஷ்குமார் , மதுரை திருமங்கலத்தை சேர்ந்த மாடசாமி , பம்மலை சேர்ந் த பாலசுந்தரம், தூத்துக்குடியை சேர்ந்த திருமேனிச்செல்வம், கோவை தொண்டாமுதூரை சேர்ந்த ரமேஷ் , சுரேஷ் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனாலும் பிரான்ஸில் இருந்து “தமிழச்சி” என்ற பெயரில் முகநூலில் இயங்கும் நபர், தொடர்ந்து முதல்வரின் உடல் நலம் குறித்து அதிர்ச்சிகர பதிவுகளை எழுதி வருகிறார். அவர் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் தமிழச்சி,  தமிழக காவல்துறை தன் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் எதிர்கொள்ள தயார் என்று எழுதி வருகிறார்.
ஆண்டனி ஜேசுராஜ்  பதிவு
ஆண்டனி ஜேசுராஜ் பதிவு

இந்த நிலையில்  தூத்துக்குடி  மாவட்டம் , புதுக்கோட்டை என்ற பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் ஆண்டனி ஜேசுராஜ் (வயது 24) என்பவரை  காவல்துறையினர்  கைது செய்தனர். மணப்பாட்டில் உள்ள புனித யாகாப்பர் ஆலயத்தில் பயிற்சி போதகாரக இருக்கும் அந்தோணி ஜேசுராஜ்  பிஏ    பட்டப்படிப்பும்  சைக்காலஜி டிப்ளமோவும் படித்துள்ளார்.
பேஸ்புக் தமிழச்சி முதல்வர் உடல்நிலை பற்றி ஆரம்பத்தில் ஒரு பதிவை எழுதினார். பிறகு அதை வாபஸ் வாங்கி கொள்வதாக அறிவித்திருந்தார். முதல்வர் உடல்நிலைப்பற்றி பிரான்ஸ் தமிழச்சி எழுதிய அந்த  பதிவை எடுத்து தனது முகநூல் பக்கத்தில் ஆண்டனி ஜேசுராஜ் ஷேர் செய்து அது பற்றி மேலும் அவதூறு வதந்தி பரப்பும் விதமாக சொந்தமாகவும் எழுதியிருக்கிறார்.
இதுபற்றி  புரசைவாக்கத்தில் வசிக்கும் அதிமுக தகவல் தொடர்பு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தூத்துக்குடிசென்று ஆண்ட்னி ஜேசுராஜை கைது செய்தனர்.