குந்தி:

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 5 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 53 குடும்பத்தினரை ஆர்எஸ்எஸ் மீண் டும் இந்து மதத்திற்கு திரும்ப செய்துள்ளது.

சிந்திர பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் வசித்து வந்த இவர்களை ஆளும் பாஜக.வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சயோஜக் லஷ்மன் முண்டா கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக கிறஸ்தவ மிஷனரியால் கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது மதமாற்றம் கிடையாது. எங்களை இழந்து சென்ற சகோதர சகோதரிகளை திரும்ப மதத்திற்கு அழைத்து வந்துள்ளோம்’’ என்றார்.

‘‘எங்களது வட்டாரத்தை கிறிஸ்தவர் இல்லாத வட்டாரமாக மாற்ற வேண்டும். அனைத்து கிராம மக்களும் திரும்ப வருவார்கள். கிறிஸ்தவர்கள் மூலம் இந்த மலை கிராம மக்கள் அவர்களது மதத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்’’ என்று குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள சிந்திரி கிராமத்தை சேர்ந்த பாஜ துணைத் தலைவர் முண்டா கூறினார்.

இந்து மதத்திற்கு திரும்பும் இயக்கத்தை இந்து அமைப்புகள் சமீபத்தில் தொடங்கின. கடந்த ஏப்ரல் 7ம் தேதி 7 மலை வாழ் கிறிஸ்தவ குடும்பத்தினர் கோச்சாசிந்திரி கிராமத்தில் நடந்த புனிதப்படும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கைகளில் சந்தனம் தடவி கால்கள் கழுவி மதத்தில் இணைத்தார் உள்ளூர் சாமியார் ஒருவர்.

ஜார்கண்டின் மொத்த மக்கள் தொகையான 33 மில்லியனில் மலைவாழ் மக்கள் 26.2 சதவீதம் பேர் உள்ளனர். இதில் 4.5 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். வலுக்கட்டாயமாக மதம் மாற்றுபவர்களுக்க ஆளுங்கட்சியின் முதல்வர் ரகுபர் தாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வனவாசி கல்யாண் கேந்திர என்ற தன்னார்வ அமைப்பினரோடு ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் வீடுவீடாக சென்று மலை வாழ் மக்களை மதம் திரும்ப பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதோடு பொதுக் கூட்டங்களையும் நடத்தி எப்படி கிறிஸ்தவர்கள் அவர்களை பிரித்து அழைத்து சென்றனர் என்பதையும் விளக்குகின்றனர்.

‘‘ஆர்எஸ்எஸ் யாரையும் வற்புறுத்துவது கிடையாது. தாய் மதத்தில் இணைவதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறுகின்றனர். திரும்ப மறுப்பவர்களை வற்புறுத்துவது கிடையாது. அதோடு அந்த விழாவில் மறுத்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை’’ என்று இந்து மதம் திரும்பிய ஒரு குடும்பத்தின் தலைவர் தசர்த் முண்டா தெரிவித்தார்.

‘‘சர்னா மலைவாழ் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் இந்து மதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ஆர்எஸ்எஸ் கவலைப்படுகிறது’’ என்று சர்ன தரம்குரு பந்தன் டிகா தெரிவித்தார். ‘‘மதமாற்றம் குறித்து முதல்வர் பொது இடங்களில் பேசியதை தொடர்ந்தே இந்து மதம் திரும்பும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதை ஆர்எஸ்எஸ் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது’’ என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் சர்னா மலைவாழ் மக்கள் இயற்கை தாயை வணங்க விரும்புகின்றனர். அவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்று எந்த மதத்தையும் சாராமல் தனியாக இருக்க விரும்புகின்றனர் என்று சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. தங்களை தனி மதமாக அங்கிகரிக்க கோரி மலைவாழ் மக்கள் அரசுக்கு மனு அளித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கண்டிக்காத டிகா, கட்டாய மதமாற்றம் செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.