மும்பை:  ‘பண்டிதர்கள் சாதியை உருவாக்கினர், கடவுள் அல்ல’ என்று கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,  மதம் என்பது ஒருவரின் வயிற்றை நிரப்புவது அல்ல, எந்த சூழ்நிலையிலும் உங்கள் மதத்தை விட்டு வெளியேறாதீர்கள்  என்று கூறியுள்ளார். மோகன் பவத்தின் இந்த திடீர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  கடவுளுக்கு முன் அனைவரும் சமம், சாதி பிரிவினைகளை பண்டிதர்கள் தான் உருவாக்கினார்கள், எல்லா வேலையும் சமுதாய நலனுக்காகவே செய்யப்படும்போது அதில் உயர்வு, தாழ்வு எங்கிருந்து வருகிறது என்றவர், கடவுள் அனைவரையும் சமமாகதான் படைத்தார் என்றும் சாதி போன்ற வேறுபாடுகளை அர்ச்சகர்கள்தான் கொண்டு வந்தனர் என தெரிவித்துள்ளனர்.

புனித சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தை முன்னிட்டு மும்பை நகரில் உள்ள ரவீந்திர நாட்டிய மந்திர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, , “நாம் ஒரு வாழ்வாதாரத்திற்கு சம்பாதிக்கும்போது, ​​சமூகத்தின் மீது நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வேலையும் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது, ஒரு வேலை எப்படி பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்கும்?.

நம்மை படைத்தவர்களுக்கு நாம் சமம். சாதி அல்லது எந்த பிரிவும் இல்லை. இந்த வேறுபாடுகள் நம் அர்ச்சகர்களால் உருவாக்கப்பட்டன, அது தவறு. நாட்டில் மனசாட்சி, உணர்வு அனைத்தும் ஒன்றுதான், கருத்துக்கள் மட்டுமே வேறுபடுகிறது. துளசிதாஸ், கபீர் மற்றும் சூர்தாஸ் ஆகியோரை விட புனித ரோஹிதாஸ் பெருமைமிக்கவர். அதனால்தான் அவர் புனித சிரோமணி என்று கருதப்படுகிறார்.

அவரால் சாஸ்திரத்தில் பிராமணர்களை வெல்ல முடியவில்லை என்றாலும், பல இதயங்களைத் தொட்டு, அவர்களைக் கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்தார். மதம் என்பது ஒருவரின் வயிற்றை நிரப்புவது அல்ல. உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதை உங்கள் மதத்தின்படி செய்யுங்கள். சமுதாயத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத் திற்காகப் பாடுபடுங்கள், அதுதான் மதம். இத்தகைய எண்ணங்கள் மற்றும் உயர்ந்த இலட்சியங்களால்தான் பல பெரிய பெயர்கள் புனித ரோஹிதாஸின் சீடர்களாக மாறினர்.

துறவி ரோஹிதாஸ் சமூகத்திற்கு நான்கு மந்திரங்களைக் கொடுத்தார் – உண்மை, இரக்கம், உள தூய்மை மற்றும் தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் முயற்சி. உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்திலும் கவனம் செலுத்துங்கள், ஆனால் எந்த சூழ்நிலையிலும் உங்கள் மதத்தை விட்டு வெளியேறாதீர்கள். மதச் செய்திகளை வெளிப்படுத்தும் விதம் வேறுபட்டாலும், செய்திகள் ஒன்றே ஒன்றுதான். ஒருவர் தனது மதத்தைப் பின்பற்ற வேண்டும். மற்ற மதங்களுக்கு தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு கூறினார்.