“குடியரசுத் தலைவராக ஆர் எஸ் எஸ் தலைவர்..மகிழ்ச்சிதான்…ஆனால்…!” என்கிறது சிவசேனா

மும்பை,

குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பாகவத்தை தேர்ந்தெடுப்பது தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிவதால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியின் பெயர் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பெயரும் தற்போது அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறது.

உயர் பணமதிப்புநீக்க நடவடிக்கை, பத்ம விருதுக்கு சரத்பவார் தேர்வுசெய்யப்பட்டது உள்பட பல்வேறு விசயங்களில் மத்திய அரசை விமர்சித்துவரும் சிவசேனா, மோகன் பாகவத்தை குடியரசுத்தலைவராக தேர்வுசெய்ய பாஜக பரிந்துரைத்துள்ளதாக  கிடைத்த  தகவல்  மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின்  மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், குடியரசுத்தலைவர் பதவிக்கு மோகன் பாகவத்தின் பெயர் அடிபடுகிறது. அது வரவேற்கக்கூடிய ஒன்று என்றார். அதேநேரம் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தருவது குறித்து தங்கள் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேதான் முடிவெடுக்கவேண்டும் என்றும்  ஆதரவு வேண்டுமென்றால் அவர்கள் மும்பை வந்து உத்தவ்வை சந்தித்து பேசவேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.

 
English Summary
RSS Chief Mohan Bhagwat For President? Good Idea, Says Shiv Sena