சென்னை:

திருவாரூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது இதற்கு, இதுவரை ரூ.81 லட்சம் நன்கொடை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு திருவாரூர் அருகே அருங்காட்சி யகம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்த அருங்காட்சியம் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் திறக்கப்படும் என்று கூறினார்.

இதற்காக ’’திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் நிலம் வாங்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கலைஞரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கட்சியினர்,எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன்படி, திமுகவைச் சேர்ந்த  20 மக்களவை மற்றும் ஐந்து மாநிலங்களவை உறுப்பினர்கள், மற்றும் திமுக எம்எல்ஏக்கள் 100 பேரிடம் இருந்து நன்கொடை வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.  அத்துடன், கட்சியின் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

அதுபோல, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் பெயரிலும் ஒரு தனி அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கும் திமுகவினர் நன்கொடைகள் அளிக்க வேண்டும் என்றும், நன்கொடைகள்  காசோலைகள் மற்றும் டி.டி.க்கள் தயாளு அம்மாள்  டிரஸ்ட் என்ற பெயரில் இருக்க வேண்டும் என்றும் அத்துடன் நன்கொடை வழங்குபவர்கள், தங்களுடைய பான் எண்ணையும் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டு உள்ளது.

கருணாநிதியின் அருங்காட்சியகத்துக்கு அக்டோபர் 14 வரை மொத்தம் ரூ .80.56 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி, தற்போதைய திமுக எம்.பி.க்கள்,எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்கினால், மொத்தத் தொகை ரூ .1.55 கோடியாக இருக்கும். ஆனால், தற்போது வரை ரூ.81 லட்சம் அளவில் மட்டுமே வசூலாகி உள்ளது.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தரப்பில் கருணாநிதி அருங்காட்சியகத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.