டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு  ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் சரியே என மத்தியஅரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு  அறிவித்து உடனே நடைமுறைப்படுத்தியது. அதே வேளையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மண்டல் குழு பரிந்துரைகளின் படி வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப் படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.  இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின்போது,  ஆண்டு வருமானம் 8 லட்சம் உள்ளவர்கள் வருமான வரி கட்டுவதற்கு தகுதியானவர்கள் என்ற நிலையில், அவர்கள் ஏழைகள் என்று எப்படி கூற முடியும், அவர்களுக்கு இடஒதுக்கீடு ஏன் என்றும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அதுகுறித்து பிரமான பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று மத்தியஅரசு தரப்பில் பிரம்ன பத்திரம் தாக்கல் செய்துள்ளது.  அதில் உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை பெற ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது நியாயமானது என்று தெரிவித்து உள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 14,15 மற்றும் 16ன் அடிப்படையில், உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு சரியானதே என்றும்,  ஓபிசி பிரிவினருக்கான கிரீமிலேயர் விதிகளை பொதுப்பிரிவினருக்கும் பயன்படுத்தலாம் என்று மேஜர் ஜெனரல் சின்ஹோ ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதை பின்பற்றியே 10% இடஒதுக்கீடும், அதற்கான வருமான உச்சவரம்பும் நிர்ணியிக்கப்பட்டது என்று  தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற  நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஆண்டு வருமானம் 8லட்சம் சம்பாதிக்கும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசை விளாசிய உச்சநீதிமன்றம்…