சென்னை: மழை வெள்ளத்தர்ல் சேதமடைந்த சென்னை சாலைகளை பராமரிக்க ரூ.7.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதிக பட்சமாக  அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும்பரவலாக மழை பெய்து வருகிறது. இடையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர் மழை கொட்டியது. இந்த மழைக்கு தலைநகர் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது.

இந்த நிலையில், சென்னையின் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதன்படி,   2021-2022-ம் ஆண்டிற்காக மொத்தம் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில்,  உட்புற சாலைகளை ஒட்டும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள 6 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும்,  9 சாலைகள் மைய தடுப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு பணிக்காக ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மூலம் 5270.36 கி.மீட்டர் நீளமுடைய 34640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 3932.13 கி.மீ நீளமுடைய 23,221 எண்ணிக்கையிலான தார் சாலைகளும், 1270.83 கி.மீ நீளமுடைய 11,039 எண்ணிக்கையிலான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.