சென்னை:

பிரபல சினிமா பைனான்சியர் வீட்டுகளில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் ரூ.65கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏராளமான  பைகளில் கட்டுக்கட்டாக பணம் உள்ளது தொடர்பான  புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் க வருமானவரி ஏய்ப்பு செய்ததாக கூறிய வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், சினிமா நிறுவனம் மற்றும் பங்குதாராக உள்ள நிறுவனங்கள் உள்பட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதுபோல,பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்,  மற்றும் நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல்  வருமான வரித்துறை நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாளாகவும் ரெய்டு தொடர்கிறது.

இந்த நிலையில் அன்புச்செழியன் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை இல்லத்தில் இருந்து 50 கோடி ரூபாயும், மதுரை  இல்லத்தில் இருந்து 15 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத 65 கோடி ரூபாய் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் குறித்தும் பைனான்சியர் அன்புசெழியனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.