சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்றும், ரூ. 63.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தலைமை தேர்தல் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொதியில் வரும் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால், அங்கு கடைசிகட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு,  ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்கு சாவடியில் மட்டும் 1,260 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்றார்.

மேலும்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை  688 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு உள்ளதாகவும், உரிய அனுமதி மற்றும் ஆவணமின்றி கொண்டு செல்ல ரூ.64.34 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றவர்,  அதில் ரூ.51.31 லட்சம் ரொக்கப்பணம், ரூ. 11.68 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் வாக்குப்பதிவு அன்று கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றவர், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அதனால், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் கூறினார்.