சென்னை: அதிமுக தொடர்பாக மக்கள் மன்றத்தை நாடுவோம்; அதிமுக ஈபிஎஸ் தாத்தா தொடங்கிய கட்சியா? என ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி அளித்தார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானதும் செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால், அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றுள்ளது. ஓபிஎஸ் தனிமரமாகி உள்ளார்.

இந்த நிலையில்,  இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு,  அவரது சிலைக்கு மரியாதை செய்தவர், அவரது சமாதியிலும் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து,  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,  பண்ருட்டி ராமசந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் உள்பட சிலர்  கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பன்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் ஆலோசனை முடித்துவிட்டு, பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஓபிஎஸ் கூறியதாவது,

உச்சநீதிமன்றத்தில்  தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஆனால், நாங்கள் இதை மக்கள் மன்றத்தில் எடுத்துச்சென்று   நீதி கேட்போம், மக்கள் மன்றத்தை நாடுவோம் என குறிப்பிட்ட ஓபிஎஸ், ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த தீர்ப்பை வைத்து கொண்டு தேர்தல் ஆணையம் செல்ல முடியாது என்றார்.

அதிமுக என்ன பழனிசாமி தாத்தா மாடசாமி ஆரம்பித்த கட்சி இல்லை. இது தொண்டர்களால் உருவாக்கபட்ட கட்சி. தீர்ப்புக்கு பின்னர் தான் நாங்கள் எழுச்சியோடு இருக்கிறோம் என்றார்.

இதையடுத்து செய்தியார்களின் கேள்விக்கு பதில் கூறிய ஓபிஎஸ், ”எவனோ கிறுக்கன் சொன்னால் அதைபோய் என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே, கொடநாடு வழக்கு என்ன ஆச்சு, A TO Z டீம் அவர்கள்தான். அவர்களை பற்றி சொல்ல ஆயிரம் உள்ளது அது இனிமேல் ஒவ்வொன்றாக வெளியே வரும், கட்சியின் நலன் கருதி பொறுமை காத்தோம். எடப்பாடி பழனிசாமிதான் திமுகவின் பி டீம், அதுமட்டுமில்ல A முதல் Z டீம் வரை அனைத்தும் இபிஎஸ்தான் என ஆவேசமாக சாடினார்.

அவர்கள் பேசினால் நானும் பேசுவேன். எனக்கு பேச ஆயிரம் இருக்கு இனி ஒவ்வொன்றாக வெளியே வரும். கட்சி விதிகளுக்கு உட்பட்டு அமைதியாக இருக்கிறேன் என குறிப்பிட்ட ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் என்பக்கம் இருக்கிறார்கள் என்றார்.

சசிகலாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு,  அதற்கான சூழ்நிலை அமையவில்லை.  கூடிய விரைவில் சந்திப்பு நடக்கும் என்றவர், சின்னமாவையும், பன்னீர் செல்வத்தையும் டிடிவியையும் எக்காரணத்தை கொண்டு நாங்கள் சேர்க்கமாட்டோம் என்று சொல்கிறார். அதிமுக இவர் ஆரம்பித்த கட்சியா; இல்லை இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா?

அதிமுகவில் உங்களையும் மற்றும் டிடிவி, சசிகலாவை சேர்க்க மாட்டேன் என்று கூறுகிறார்களே,  நீங்கள் சசிகலாவை சந்திப்பீர்களா  என்ற கேள்விக்கு, அவர்கள் யார் எங்களை அதிமுகவில்  சேர்க்க மாட்டேன் என்று சொல்வது.?  புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் 50 ஆண்டுகாலம் உயிரை கொடுத்து இந்த இயக்கத்தை காப்பாறி இருக்கிறார்கள்.

இரு தலைவர்களும் கடைப்பிடித்த சட்டவிதியை காப்பாற்றுவதற்காக நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம். அம்மாதான் நிரந்தர பொது செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கூவத்தூரில் நடந்தது போல் கட்சியை கைப்பற்றி தன் கைக்குள் வைத்து கொள்ள நினைக்கிறார்கள். இது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல; பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல; தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்றார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதே என்ற கேள்விக்கு,  உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடை வும் இல்லை.  இதற்கு விடிவு வரும் வரை நாங்கள் உச்சநீதிமன்றத்தில் போராடுவோம், மக்கள் மன்றத்தை நாடி செல்ல எங்கள் படை தயாராகிவிட்டது. உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு பிறகே எங்கள் தொண்டர்கள் இன்னும் எழுர்ச்சியோடு உள்ளார்கள் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார். ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொண்டர்கள், மக்களிடம் உள்ளது

இவ்வாறு கூறினார்.