சென்னை:  தமிழ்நாடு அரசு அறிவித்துருள்ள வெள்ள நிவாரணம்  ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று சென்னையில் தொடங்கியது. வரும் 16ந்தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என செய்திகள் வெளியான நிலையில், இன்றே (14ந்தேதி) டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

 டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல்  காரணமாக பெய்த கனமழை மற்றுத்ம சூறாவளியால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பலரும் வெள்ளத்தால் சிக்கி தவித்தனர்.  சென்னை மீண்டும் வெள்ளக்காடாது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இவர்களை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, அந்த பணம் வழங்குவது தொடர்பாக  டோக்கன் வழங்குவது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கிய தமிழ்நாடு அரசு, ரேசன் கடை மூலம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தது. ரொக்கமாக வழங்க ஏற்பாடு வரும் 17ஆம் தேதி முதல் நியாய விலை கடைகளில் 6,000 ரூபாய் வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,   ரேசன் அட்டைதாரர்களுக்கு  வீடு வீடாக சென்று மாநகராட்சி அதிகாரிகள், ரேசன் கடை ஊழியர்கள்  நேரடியாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில், எந்த நியாய விலை கடைக்கு வர வேண்டும் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று   சென்னையில் தொடங்கியது. சென்னையில்  உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நிவாரணம் வழங்குவது குறித்து ரேசன் கடை பணியாளர்களுக்கு இன்று காலை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு பிறகு பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ரேசன் கடை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை! மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை…