சென்னை: கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு அறிவித்தபடி,  விதிகளின் படி உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்ட விதிகளின்படி உடனே தமிழகஅரசு  இழப்பீடு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்க உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் 50ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது என பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து 36ஆயிரத்து 220பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என கூறினார். பிற மாநிலங்களில் கூடுதல் இழப்பீடு வழங்கியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், கூடுதலாக இழப்பீடு வழங்க எந்த தடையும் இல்லை எனவும், கூடுதல் எவ்வளவு வழங்குவது என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

மேலும்,  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.