சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த கடந்த இரு ஆண்டு காலக்கட்டத்தில் ரூ.400 கோடி ஊழல்  நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. 327 பக்கம் கொண்ட 400 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் கொடுத்துள்ளது. இந்த ஊழல் குறித்த புகார் மற்றும் ஆதாரங்களை காணலாம். ஆதாரம் இல்லாமல் அறப்போர் எந்த ஒரு ஊழல் புகாரையும் கொடுத்தது கிடையாது இனியும் கொடுக்காது என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ள நிலையில்,  அமலாகத்துறையின் விசாரணையின்போது, அவரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், நெஞ்சுவலிப்பதாக கூறி, தற்போது தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு,  ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் அவர்மீது மேலும் ஒரு பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளது. பல விதமான Transformer வாங்க போடப்பட்ட பல ஒப்பந்தங்களில் போட்டியிட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையை Quote செய்தது எப்படி? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரே தொகையை, அதுவும் சந்தை விலையை விட மிக அதிகமாக Quote செய்திருந்தும் அந்த டெண்டர்களை ரத்து செய்யாதது ஏன்? செட்டிங் செய்தது யார்? யாரெல்லாம் இந்த செட்டிங் டெண்டர்களால் பயனடைந்தார்கள்? என்று  ஆதாரங்களுடன் விளக்கும் விரிவான வீடியோவையும் வெளியிட்டு உள்ளது.
தங்களது குற்றச்சாட்டுக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்வாரா? DVAC வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமா? செய்தி தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்துமா? எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்களா? பதில் கிடைக்கும் வரை அறப்போர் தொடரும்..! என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்க  ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், “செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் எப்படி நடந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தபடி டெண்டர் அதிகாரி காசி இந்த முறைகேட்டுக்குத் துணை போனதற்கும் அறப்போர் இயக்கம் சார்பில் ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் – ஒரே விலையில் டெண்டர்கள்:

500 கிலோவாட் திறன் கொண்ட 800 டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது பற்றி அறப்போர் இயக்கம் விவரிக்கிறது. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒப்பந்தம் திறக்கப்படும்போது, 26 ஒப்பந்ததாரர்களும் டிரான்ஸ்பார்மருக்கு ஒரே விலையைக் குறிப்பிட்டு ஒப்பந்தபுள்ளியை சமர்ப்பித்து உள்ளார்கள். டெண்டர் ஆய்வுக்குழு இவற்றை ரத்து செய்வதற்குப் பதில் விலையை ரூ.12,49,800 ரூபாயாகக் குறைத்து 16 ஒப்பந்ததாரர்களுக்கு தலா 50 ட்ரான்ஸ்பார்மர்கள் வீதம் சமமாகப் பிரிந்து ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போது ஒரு டிரான்ஸ்பார்மரின் டெண்டர் தொகை சராசரியாக 7,89,750 ரூபாய் விலையில்தான் இருந்ததுள்ளது. அதன்படி டெண்டரின் மொத்த மதிப்பு 63 கோடி ரூபாய்தான்.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தானில் போடப்பட்ட 500 கிலோவாட் டிரான்ஸ்பார்மர்களுக்கான ஒப்பந்தமானது 7,87,311 ரூபாய்க்குப் போடப்பட்டுள்ளது. இப்போதும்கூட ரூ.8,91,000 இந்த டிரான்ஸ்பார்மர் கிடைக்கிறது. தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் வெளியிட்ட 2021-22ஆம் ஆண்டுக்கான விலைப்பட்டியலிரலும் இதன் விலை ரூ.7,89,750 ரூபாய் என்றுதான் குறிப்பிட்டுள்ளது.

ஒரே விலையில் ஒப்பந்தப் புள்ளி குறிப்பிட்டப்பட்ட டெண்டர்களை ரத்து செய்யாமல் மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான ராஜேஷ் லகானி ஐஏஎஸ், அனைத்து டெண்டர்களுக்கும் ஒப்புதலும் வாங்கி இருக்கிறார் என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

இந்த மெகா டிரான்ஸ்பார்மர் ஊழல் தொடர்பாக டெண்டர் அதிகாரி காசி, டெண்டர் ஆய்வு குழு அதிகாரிகள், ஒரே விலையில் டெண்டர் கொடுத்த நிறுவனங்கள், ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இணைப்பு: குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள்

Final_Annexure Final_Complaint Tamil Press Release EB Scam 400Cr