சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் ரூ.50ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகளுடன் 34 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திராவிட மாடல் அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி உள்ளது என பெருமிதத்துடன் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்தப்பட்ட இந்த  34 ஜோடிகளுக்கு மங்கள நாண் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமணம்,  சென்னை ராஜா அண்ணாமலை புரம் பசுமை வழிச்சாலை ரெயில் நிலையம் அருகில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில்  இன்று  காலை 9 மணிக்கு நடைபெற்றது.

விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மங்கல நாண் வழங்கி 34 ஜோடிகளுக்கான திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில், . அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., மயிலை த.வேலு எம்.எல்.ஏ மற்றும் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் அரசு முதன்மை செயலாளர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உள்பட அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இதை பின்பற்றி ராஜஸ்தானிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திராவிட மாடல்  அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி உள்ளது என்றவர், தமிழ்நாட்டில் 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.