சென்னை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது தற்கொலை குறித்து  சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். மேலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் எனவும் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.  டிஐஜி விஜயகுமார்  மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் இரங்கல்:

டிஐஜி  விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் இழப்பு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக திறம்பட பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து துயருற்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பணிகளில் துடிப்புடன் செயல்பட்ட விஜயகுமார் அவர்களின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், டிஐஜி  விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை குறித்து, சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன் என கூறி உள்ளார்.

தமிழகஅரசு விசாரணை – அண்ணாமலை

அதுபோல,  டிஐஜி  விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்த அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற அவர், தமக்கு இ.கா.ப தவிர வேறு எந்த பணியும் தேவையில்லை என்று கூறி கேட்டுப் பெற்றவர். காவல்துறையில் பணியாற்றும், காவல்துறையில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்களின் நாயகனாக விளங்கியவர். காவல் அதிகாரி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் நிலையில் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும். அதே நேரத்தில் காவல்துறையில் நிலவும் பணி சுமையை குறைக்கவும், காவல்துறையினருக்கு உரிய ஓய்வு அளிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை காவல்துறையினருக்கு உரிய உடல், மன நல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் வலியுறுத்துகின்றேன் என கூறியுள்ளார்.