சென்னை: 2022-ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குதல் தொடர்பாக ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரம் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிம்போது, கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக் கொணரக்கூடிய வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், நான் துணை முதல்-அமைச்சராகவும், துறையினுடைய அமைச்சராகவும் இருந்தபோதுதான், கருணாநிதியால் உத்தமர் காந்தி கிராம ஊராட்சி என்ற விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. அந்த வகையில், 2006 முதல் 2010-ம் ஆண்டு வரை, 60 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு இடைப்பட்ட காலத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

சிறப்பாகச் செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும். ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு அறிக்கையில், சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குதல் தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கிராம ஊராட்சிக்கு விருது வழங்கப்படவுள்ளதால் மொத்தம் 37 கிராம ஊராட்சிகள் மாநில அளவில் தேர்வு செய்யப்பட உள்ளன. ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 இலட்சம் வீதம் மொத்த செலவினம் ரூ.3.70 கோடி (ரூபாய் மூன்று கோடியே எழுபது இலட்சம்) ஆகும்.

மேலும், விருதுக்கான கேடயம் வழங்குதல், சான்றிதழ் தயாரித்தல், நாளிதழ்களில் விளம்பரம் செய்தல், ஊராட்சி தலைவர்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட இதர நிர்வாக செலவினங்கள் மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக செலவினமாக ஆண்டிற்கு ரூபாய் 10 இலட்சம் கூடுதலாக அனுமதித்து ஆக மொத்தம் செலவினம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3.80 கோடி (ரூபாய் மூன்று கோடியே எண்பது இலட்சம்)ஆகும்.

மேலும், இதற்கான தனியானதொரு நிதித்தொகுப்பினை வழங்கிடவும், இந்த தலைப்பில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் ஆணையர் அவர்கள் நிதியைப் பெற்று தொடர்புடைய கிராம ஊராட்சிக்கு வழங்கிடவும் அனுமதி அளிக்கப்படும்.  எனவே, சிறந்த கிராம ஊராட்சிக்கான உத்தமர் காந்தி விருது’ கிராம ஊராட்சித் தலைவர்களுக்கிடையே சிறந்த தலைமைப் பண்பை ஊக்குவிக்கவும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்கவும் சிறந்த கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் 2022ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்க ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அரசைக் கோரியுள்ளார். மேலும், சிறந்த கிராம ஊராட்சிகளை தேர்வு செய்வதற்கான காரணிகளை மதிப்பெண்களுடன் அனுப்பியுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்து அதனை ஏற்க முடிவு செய்தது. அதன்படி, கிராம ஊராட்சித் தலைவர்களுக்கிடையே சிறந்த தலைமைப் பண்பை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்கவும், சிறந்த கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.10 இலட்சம் வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு, ரூ.10 இலட்சம் நிர்வாக செலவினங்கள் உட்பட, ஆண்டு ஒன்றுக்கு 380 கோடி ரூபாய் (ரூபாய் மூன்று கோடியே எண்பது இலட்சம் மட்டும்) செலவீட்டில், 2022ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிக்கான உத்தமர் காந்தி விருது’ இணைப்பில் உள்ள காரணிகளின் மதிப்பீட்டு முறை மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்து மீண்டும் வழங்க அரசு நிதி ஒப்பளிப்பு ஆணையிடுகிறது.

ஒப்பளிக்கப்பட்ட செலவினம் “புது துணைப் பணி” குறித்த செலவினமாகும். இதற்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள், நிதித்துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாக கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-ல் உள்ள அட்டவணை “A” படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதித்துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார். மேலும், இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2022-2023-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதித் (வ.செ.பொது.1 / ஊ.வர் துறைக்கு அனுப்பி வைக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார். ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகையினை பெற்று தொடர்புடைய தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.