சென்னை: தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இன்று 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 49 திட்டங்களுக்கு பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்த ஆரோக்கியமான நகர்வுகள் தமிழ்நாடு மக்களியே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற தலைப்பில் இன்று கிண்டியில் தொழில்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் புகைப்படம் தொகுப்பு மற்றும் நிறுவனங்களின் முழு விவரம்  இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டலின் பேசியதாவது,

“தமிழகம் என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது. அத்தகைய தமிழகம், முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலம் என்பது மிகத் துயரமான கரோனா காலம் ஆகும். தமிழக அரசின் துணிச்சலான, துரிதமான நடவடிக்கைகளின் காரணமாக கரோனாவை வென்ற காலமாக இதனை மாற்றினோம். கரோனா தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக இந்த மாநிலத்தை மாற்றி இருக்கிறோம்.

கரோனா தாக்கத்தின்போது மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல, நிதி நெருக்கடியையும் நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று இந்த இரண்டு மாத காலத்தில் 489.78 கோடி ரூபாய் நிதி திரண்டுள்ளது. அரசின் மீது மக்கள் வைத்துள்ள பெருநம்பிக்கையை இது காட்டுகிறது. இந்நிதியை வழங்கிய தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், மூத்த அதிகாரிகள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பிலும் எனது தனிப்பட்ட முறையிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலை வர்த்தகமாக மட்டுமில்லாமல் சேவையாக நினைத்து நீங்கள் தொண்டாற்றி வருவதற்கு நான் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய எண்ணம் கொண்டவர்களாகத் தமிழகத் தொழில்துறையினர் இருக்கும்போது எனக்கு இன்னும் கூடுதலான நம்பிக்கை பிறக்கிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழகம் நிச்சயம் மாறப் போகிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என்று தமிழக அரசு அழைப்பதைத் தாண்டி, தமிழகத் தொழிலபதிபர்கள், மற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

உலகத்தையே அச்சுறுத்திய இந்த கரோனா காலத்திலும், கணிசமான முதலீடுகளைத் தமிழகம் ஈர்த்துள்ளது. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் – என்கிறார் வள்ளுவர். தமிழக அரசின் அயராத முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன். சவால்களை எதிர்கொள்ளும் எங்களது அரசின் திறன் என்றென்றும் நிலைத்து நீடித்து இருக்கும் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உலக அளவில் உற்பத்தித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழகத்தின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது.

கருணாநிதியின் அரசில் தொழில்துறை அமைச்சராக நான் இருந்தபோது, உலக அளவில் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான டைம்லர், ரெனால்ட் நிஸ்ஸான், சாம்சங், கேடர்பில்லர், தோஷிபா, மிஷலின் டயர் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் முதலீடுகளை மேற்கொண்டன. அன்றைக்கு, முதலீடுகள் மேற்கொள்ள இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழகம் விளங்கியது.

தற்போது, தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தினை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம்.

2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக (GDP Economy) தமிழகத்தினை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க, உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நான் கோருகிறேன்.

தொழில் புரிவதை மிகவும் எளிதாக்கிடவும், அதற்கு உகந்த சூழ்நிலையினையை உருவாக்கிடவும், நான் உறுதிபூண்டுள்ளேன். முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்களது திட்டத்தினை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுவற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-வினை நான் இன்று தொடங்கி வைத்துள்ளேன்.

தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட, ஒரு மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளமாக இது விளங்கும்.

இணைய முறையில் உங்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். உரிய துறைகளுக்கு அவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். உரிய துறைகளுடன் காணொலி மூலமாகச் சந்திப்புகள் நடத்தப்படும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வாடிக்கையாளர்களுடன் உடனடி உரையாடல்கள் நடத்தப்படும். இந்த வசதிகள் அனைத்தும் இந்த ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 மூலமாக உங்களுக்குக் கிடைக்கும். கூடுதலாக 210 சேவைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.

அதாவது, தமிழகத்தில் தொழில் தொடங்கத் திட்டமிட்டதுடன் உங்களது சிந்தனை செயல்பாட்டுக்கு வரும். அத்தகைய சூழலை நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்.

தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே தமிழக அரசின் கதவுகள் திறக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்.

பெயரளவிலும், காகித அளவிலும் என்று இல்லாமல், திறம்படச் செயல்படும் ஓர் அமைப்பாக இந்த ஒற்றைச் சாளர இணையதளம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் செயல்பாட்டினை நானே நேரடியாகக் கண்காணிப்பேன். புதிய முதலீடுகளைப் பெருமளவு ஈர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதல் இலக்கு! அதற்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்!

சிப்காட் நிறுவனம் மூலமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள கெலவரப்பள்ளியில் 10 MLD நீர் சுத்திகரிப்பு நிலையம் (TTRO Plant) அமைக்கத் திட்டமிடப்பட்டு, அது ஓராண்டுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ஓசூரில் அமையப்பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்குத் தடையின்றித் தாராளமாகத் தண்ணீர் வசதி கிடைத்திடும்.

தொழிற்சாலைகள் அதிகம் உள்ள, வல்லம் வடகால், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில், தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தின் அருகிலேயே வசிக்கும் வகையில், குடியிருப்பு வசதிகள் செய்து தருவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 500 கோடி ரூபாய் அளவிலான தொழில் மேம்பாட்டு நிதி (Industrial Eco-System Fund) ஒன்றை உருவாக்க நான் ஆணையிட்டுள்ளேன். இதன் மூலம், தொழில் பூங்காக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான புத்தாக்க மையங்கள் (Innovation Centres), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், பொதுவான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள இயலும். இதற்கென, முதற்கட்டமாக, 95.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் பொது உற்பத்தி, ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி ஆகியவை தொடர்ந்து நடந்துவரும் தொழில்களாக இருக்கின்றன. இந்த நிலையில், வளர்ந்து வரும் துறைகளான மின்வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள் மற்றும் காற்றாலை கலன்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* தொழில்துறைப் புரட்சி 4.0 (Industry 4.0) என்று அழைக்கப்படும் நான்காவது தொழில்துறைப் புரட்சி, நம் மாநிலத்துக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பாகும். நமது மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பதால், I.O.T. 3D பிரிண்டிங் போன்ற பல நுண்ணிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பணியாளர் திறன்களை மேம்படுத்தல், உலக விநியோகச் சங்கிலிகளுக்கான மதிப்புக்கூட்டல் போன்ற பல நுட்பமான, சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

* இப்போது கூட, General Electric கம்பெனி TIDCO உடன், ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence) அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதன் மூலம் விமான இயந்திரங்களுக்குத் தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்.

* தமிழகத்தில் முதலீடு செய்பவர்களின் அனுபவங்களை எளிதாக்கவும் மேலும் இனிமையாக்கவும், ஏற்றுமதிக் கொள்கை, மருந்துப் பொருட்கள் மற்றும் உயிரிநுட்பக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க ஒரு கொள்கை எனப் பல கொள்கைகளை வெளியிடவும் இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

* அனைத்துத் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தரவுத்தளம் (Industrial Database), தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஏற்றுமதிக்கான பிரத்தியேக ஏற்றுமதிப்பிரிவு (Export Cell) மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளுடன் தொழில் உறவுகளைப் பலப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தொழில்கள் மிகப் பெரிய அளவில் பயனடையும்.

கருணாநிதி அரசில், நான் தொழில்துறை அமைச்சராக இருந்த வேளையில்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு SEZ நிறுவனத்தின் தொழிற்சாலையைத் திறந்து வைத்தேன். தற்போது அந்நிறுவனத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். அதில் பெரும்பாலும் மகளிர் பணியாற்றி வருகிறார்கள். இதைவிட மகிழ்ச்சியான செய்தி எனக்கு இருக்க முடியாது. இந்த நிறுவனம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திலும் சுமார் 6,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், ஒரு தொழில் திட்டம் தொடங்கிட இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.

மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, ஒரு சிறந்த ஊக்கச் சலுகைத் தொகுப்பைத் தமிழக அரசு வழங்கியது. இதன் பயனாக, இன்றைய தினம் ஐநாக்ஸ் நிறுவனம், 200 MT உற்பத்தித் திறனுள்ள திரவ ஆக்ஸிஜன் உற்பத்தித் திட்டத்தினை, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் நிறுவ உள்ளது. இந்தத் திட்டத்துக்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை எண்ணி மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

* இன்றைய தினம் புதிய தொழில்கள் தொடங்க, 35 நிறுவனங்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலமாக 17,141 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கிறது. 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

* 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக 4,250 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. 21,630 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* 5 நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, 7,117 கோடி முதலீடு கிடைக்கும். 6,798 பேருக்கு வேலை கிடைக்கும்.

மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் இன்று உறுதி செய்யப்பட்டுள்ள 49 திட்டங்களின் மூலமாக 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பச் சேவைகள், ஜவுளி, மருந்துப்பொருட்கள் ஆகிய பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், திருவண்ணாமலை என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

இந்தப் பரவலான தொழில் வளர்ச்சியினால் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சி காண்பதுடன், இளைய சமுதாயத்தினர் தங்கள் இல்லத்துக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகளைப் பெற்றிட முடியும். தமிழகத்தில் உள்ள மனிதவளமானது மேலும் மேலும் மேம்பாடு அடைய இந்த 49 நிறுவனங்களும் அடித்தளம் அமைத்துள்ளன.

அனைவருக்கும் உயர்கல்வி – சமூக மேம்பாடு – தொழில் வளர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீராக வளர வேண்டும் என்பதே எமது அரசின் இலக்கு ஆகும். மூன்றும் ஒன்றாக வளர்வதுதான் சீரான வளர்ச்சி. இம்மூன்றும் தனித்தனியாக வளர்ந்துவிட முடியாது. ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று துணை செய்வதாக அமைய வேண்டும். அந்த வளர்ச்சிக்குத் தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அதிகப்படியான முதலீடுகளைத் தாருங்கள். அதன் மூலமாகத் தமிழக இளைஞர்களின் மனிதவளத்துக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யுங்கள். இதன் மூலமாகத் தமிழ்ச் சமூகத்தின் மேன்மைக்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள் என்று தமிழகத்தின் தொழில் துறையினருக்கு மட்டுமல்ல, தமிழக எல்லையைத் தாண்டிய தொழில் நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

தொழில் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டை மாற்றத் திட்டமிட்டு உறுதியாகவும் திறனுடனும் செயல்படும் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் காலம் தமிழகத் தொழில்துறையின் பொற்காலமாக விளங்கியது என்ற பெயரைப் பெற்றுத் தருவீர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அத்தகைய சூழலை உருவாக்குவதற்கு இந்த அரசு அனைத்து ஏற்பாடுகளையும் திறந்த மனதுடன் செய்து தரத் தயாராக இருக்கிறது”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை – வீடியோ