சென்னை: தமிழ் மொழிக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது  தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ஆம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ். பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி. ஒரு வழக்கில், தமிழ்மொழி வளர்ச்சிக்கென தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர்நீதி மன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.

ஆங்கிலத்தைத் தவிர பிறமொழிகள் ஆபத்தில் உள்ளன. தினம்தோறும் மொழிகள் செத்துக் கொண்டிருக்கின்றன. தடுமாறிக் கொண்டிருக்கிறது, சாகாவரம் பெற்ற தமிழே தடுமாறிக் கொண்டிருகிறது. சீன மொழியைக் கற்றுக்கொள்ள உலகமெங்கும் 500-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தைப் பரப்ப பிரிட்டிஷ் கவுன்சில், பிரெஞ்சு மொழி கற்க அலையன்ஸ் ப்ராஞ்சசே, இந்தியைப் பரப்பவும் கற்றுக்கொடுக்கவும் ஹிந்தி பிரச்சார சபா என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகள் உள்ளன.

ஆனால், தமிழை முறையாகக் கற்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற இன்னமும் ஓர் அமைப்பு இங்கே ஏற்படுத்தப்படவில்லை. உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழைக் கற்றுக்கொள்ள நெறிப்படுத்தப்பட்ட பாடத் திட்டமோ, தேர்வு முறையோ, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழோ கொண்ட ஒரு படிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழில் அச்சில் இல்லாத நூல்களை, அகராதிகளை மறுபதிப்பு செய்வது, தமிழின் மகத்தான படைப்புக்களைப் பிற மொழிகளுக்கு கொண்டு சேர்ப்பது, தமிழை வழக்காடு மொழியாக, ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்துவது, தமிழ் கற்றவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தமிழகத்தில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாகப் பயிற்றுவிப்பது, தமிழ்நாட்டின் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகையிலும் தமிழும் இடம்பெறுவது, உலகத்தரத்திலான நூலகங்கள் ஒவ்வொரு நகரிலும் அமைப்பது என பற்பல பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும்.

இவைபோன்ற பெரும் முயற்சிகளை தனிக்கவனம் செலுத்தி மேற்கொள்ள, தமிழ் மொழி வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டியது அவசியம். நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கான அறிவிப்பினை வெளியிட வேண்டுமென உலகத் தாய்மொழி தினத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.