சென்னை,
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளா்.
கடந்த 8 ந்தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, பணம் மாற்றவும், தேவையான புதிய நோட்டுகளை பெறவும் மக்கள் அலைஅலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் மக்களின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இதன் காரணமாக விவசாயிகள், விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், உபகரணங்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு சலுகை அறிவித்தது.
தற்போது, தமிழக அரசு விவசாயிகள் வாரத்திற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை  ரொக்கமாக கடன் பெறலாம் என அறிவித்து உள்ளது.
former1
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விவசாயிகள் வாரத்திற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை ரொக்கமாக கடன் பெறலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பயிர் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதர வாடிக்கையாளர்களுக்கு இணையாக மின்னணு பரிமாற்ற சேவைகள் வழங்கப்படும். விவசாயிகள் இடுபொருள்களுக்கான தொகையை மொத்தமாக செலுத்த தேவையில்லை.
பயிர்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் பயிர்க்கடன் கணக்கில் பற்று வைத்து, தொடர்புடைய காப்பீடு நிறுவனத்திற்கு மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகள், 15.12.16 தேதிக்கு முன்னர் செலுத்திவிடும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், வரைவோலை அல்லது ரொக்கமாக செலுத்தி தங்களுக்குத் தேவையான உரம், இடுபொருட்கள் மற்றும் விவசாயப் பணிகளுக்குத் தேவையான வேளாண் எந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.