பெங்களூரு: கர்நாடக அரசு பெண் அதிகாரிக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள், 10கிலோ தங்க நகைகள் அவரது தோழி ஒருவரின் வீட்டில் இருந்து கர்நாடகஊழல் தடுப்பு காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி பறிமுதல் செய்துள்ளனர். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக  மாநில அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையில்  அதிகாரியாக இருந்து வருகிறார் சுதா. இவர்மீது ஏராளமான புகார்கள் வந்த நிலையில், இவர் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் சேர்த்துள்ளதாகவும், அவைகள் அவரது  தோழி ரேணுகா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாகவும், மாநில ஊழல் நடுப்பு காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுதாவின் தோழியான ரேணுகா என்பவரது பெங்களூரு அருகே பேட்டராயலபுராவில் உள்ள  வீட்டில்,   ஊழல் தடுப்புப்படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  அதன்மூலம், அங்கிருந்து,   250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும், சுமார் 10 கிலோ மதிப்பிலான தங்கம் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

சுதா ஏற்கனவே   ஏற்கெனவே பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி பொறுப்பில் இருந்தபோது, நிலங்களுக்‍கான இழப்பீடு பணத்தை கொடுக்‍காமல் மோசடி செய்தது உட்பட அவர் மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் இருந்து வருகின்றன. அதுதொடர்பாக ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்திய நிலையில், சுதாவின் தோழியான ரேணுகா என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்‍கியதாக தெரிகிறது. இதேபோல் மூன்றரை கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளிப் பொருட்கள், 35 லட்ச ரூபாய் ரொக்‍கம், மற்றும் வங்கிக்‍ கணக்‍கு தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றையும் ஊழல் தடுப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சுதாவின் பினாமியாக ரேணுகா செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.