மும்பை
அச்சிடப்பட்ட பின் ரிசர்வ் வங்கிக்கு வந்து சேராத ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் நாசிக், தேவாஸ் மற்றும் மைசூரு ஆகிய நகரங்களில் ரூபாய் நோட்டுக்கள் கடும் பாதுக்காப்புடன் அச்சடிக்கப் படுகின்றன. அவ்வாறு அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வரிசை எண்கள் இட்டபின் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வங்கிகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப் படுகின்றன.
இவ்வாறு வரும் நோட்டுக்களில் சில ரிசர்வ் வங்கியை வந்து சேரவில்லை எனவும் அதே நேரத்தில் சில நேரங்களில் அதிக அளவிலான நோட்டுக்கள் வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கைக்கு இதுவுமொரு காரணம் எனவும் இவ்வாறு காணாமல் போன அல்லது அதிகமாக புழக்கத்துக்கு வந்துள்ள கள்ள நோட்டுக்களை இந்த நடவடிக்கை மூலம் கண்டறியப் படலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த அச்சடித்து பிறகு ரிசர்வ் வங்கிக்கு வரும் ரூபாய் நோட்டுக்கள் பற்றிய பொது நல வழக்கு ஒன்று கடந்த 2015 ஆம் வருடம் மனோரஞ்சன் ராய் என்னும் ஆர்வலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பதிந்துள்ளார். ரிசர்வ் வங்கி சில வேளைகளில் அச்சடிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும் அல்லது குறைவாகவும் வந்து சேர்ந்ததாக அளித்த தகவல்களை ஒட்டி தொடரப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் அச்சடிக்கப்பட்ட விவரத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கு அந்து சேர்ந்துள்ள விவரத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. ரூ. 500 நோட்டுக்கள் 19,45,40,00,000 ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் ரிசர்வ் வங்கிக்கு வந்து சேர்ந்த நோட்டுக்கள், 18,98,46,84,000 மட்டுமே ஆகும். அதாவது 46,93,16,000 நோட்டுக்கள் வரவில்லை. இதன் மதிப்பு ரூ.23.465 கோடியாகும்.
2. ரூ,1000 நோட்டுக்கள் 4,44,13,00,000 ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படுள்ளன. ஆனால் ரிசர்வ் வங்கிக்கு வந்து சேர்ந்த நோட்டுக்கள் 4,45,30,00,000 ஆகும். அதாவது 1,17,00,000 நோட்டுக்கள் அதிகம் வந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.1170 கோடிகள் ஆகும்
இது குறித்த விளக்கங்கள் கேட்டு தொடுக்கப்பட்ட வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பின் இன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.