சென்னை:  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வருவாய் ரூ. 200 கோடி மட்டுமே என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கடுமையான நஷ்டத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு வருமானத்தை பெருக்க பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகிறது.

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது முதல் வழித்தடமான  நீல வழித்தடம் (விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையும், 2வது வழித்தடமான, பச்சை வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை செயல்பட்டு வருகிறது. இந்த ரண்டு விதமான வழித்தடங்களில் (Corridors) மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 55 கி.மீ. தூரத்துக்கு ரெயில்களை இயக்கி வருகிறது. சராசரியாக தினமும் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில முதல்கட்ட மெட்ரா ரயில் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், 118.9 கி.மீ. நீளத்தில் 3 வழித்தடங்களுடன் ரூ.61,843 கோடி செலவில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.   3 வழித்தடங்களில் வருகிற 2026-ம் ஆண்டு ரெயில்களை இயக்குவதற்காக மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் பகுதிபகுதியாக தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

அதன்படி,  மாதவரம்-சிப்காட் வரை 48 கி.மீ. நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்கப் பாதைகள் உட்பட 50 மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.10 கி.மீ. நீளத்தில் அமையவுள்ள தடத்தில் 18 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 30 ரயில் நிலையங்களும், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. நீளத்தில் அமைக்கவுள்ள தடத்தில் 42 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட 48 ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

2-வது கட்டத்தில் டிரைவர்கள் இல்லாத ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இதனால் ரெயில் பணிமனை மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் கூடுதலாக தேவைப்படும் என்பதால் மெட்ரோ ரெயில் நிறுவனம் கோயம்பேடு மற்றும் திருவொற்றியூர் விம்கோ நகர் பணிமனையை தொடர்ந்து, பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் புதிதாக பணிமனைகளை கட்ட முடிவு செய்தது. பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் பணிமனை கட்டப்படும் இடத்தில் நில அளவீடு உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் நிறைவடைந்து தற்போது கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 15 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. டிரைவர் இல்லாத ரெயிலை இயக்கும் கட்டுப்பாட்டு மையமும் இந்த பணிமனையில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோல நீல வழித்தடத்தை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், வருமான பெருக்கும் நோக்கில்,   பச்சை வழித்தடத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் அண்ணா நகர் கிழக்கு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஷெனாய் நகர் ரயில் நிலையம் சுரங்க வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இதன் வளாகத்தில் உள்ள 4.3 லட்சம் சதுர அடி பகுதியில் 2.1 லட்சம் சதுர அடியில் கடைகளும், 1.7 லட்சம் சதுர அடியில் பார்க்கிங் வசதிகளும் அமைக்கப்படுகின்றன. இந்த பார்க்கிங்கில் 404 கார்கள் மற்றும் 893 பைக்குகளை நிறுத்த முடியும். முன்னதாக ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அதன் மேல் பகுதியில் உள்ள திரு.வி.க பூங்காவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.  ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள இட வசதியை பயனுள்ள வகையில் மாற்றி வருமானம் ஈட்ட விரைவில் டெண்டர் விட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதேசமயம் டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், கூடைப்பந்து மைதானம், யோகா ஏரியா, திறந்த வெளி திரையரங்கம், நடைபாதை, பசுமை தரை, பொதுமக்கள் கூடும் அரங்குகள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள் என பல்வேறு வசதிகளுடன் திரு.வி.க பூங்கா மிகவும் பிரம்மாண்டமான முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதுபோல மற்ற ரயில் நிலையங்களிலும், வருமானத்தை பெருக்க பயனுள்ள வகையில் மாற்ற ஆலோசித்து வருகிறது.

இதுவரை சென்னை நடைபெற்ற மெட்ரோ ரயில் பணிக்காக ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், இதுவரை சுமார் ரூ.200 கோடி வரை மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.