சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று திமுக, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளி யிடப்பட்டு உள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையம் , அதிமுகவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

மக்களிடம் வாக்குகளை பெறும் நோக்கில் இலவச திட்டங்கள், இலவச நிதி உதவி போன்றவை அறிவிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அதற்காக நிதி எவ்வாறு பெறப்படும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி  இன்று வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில்,  அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ள வர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும் என  கூறப்பட்டுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தேர்தலை கவனத்தில் கொண்டு, மத்தியஅரசு ரூ.6 ஆயிரம் வழங்குவதாகவும், தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த இலவச பணம் மக்களிடம் சென்றடை வது தடுக்கப்பட்டு விட்டது.

தமிழகஅரசு ரூ.2 ஆயிரம்  வழங்கினால் மக்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள், நாம் , தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவுகண்ட நிலையில், தற்போது அதை வழங்க முடியாத சூழல் உருவாகிவிட்டது. இதன் காரணமாக,  தமிழக மக்களிடம் வாக்குகளை பெறும் நோக்கில், மாதம் ரூ.1500 வழங்கப்படும் என மீண்டும் தேர்தல் அறிக்கையில் அறிவித்து மாய்மாலாம் காட்டி உள்ளது.

ஆனால், அதிமுகவின் அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு, அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.