சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆளும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.  இதில் சில அறிவிக்கைகளில்  இரு கட்சிகளும் ஒரே தகவலையே தெரிவித்து உள்ளன.

தமிழ்நாடு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  40 மக்களவைத் தொகுதிகள் , 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18ம் தேதி வாக்குப்திவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், காலை 10 மணி அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதுபோல, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலும் தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை சுமார் 10.30 மணி அளவில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார்.

இரு கட்சிகளும் மக்களை கவரும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளன. இருந்தாலும், இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும்  சில அம்சங்கள்  பொதுவாக இடம்பெற்றுன. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி,

தமிழை ஆட்சி மொழியாக்க, அலுவல் மொழியாக்க நடவடிக்கை

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை

மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் தள்ளுபடி

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை

தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க நடவடிக்கை

கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் குறைக்கப்படும்

இவ்வாறு இரு கட்சிகளும் ஒரே தகவலை தெரிவித்திருந்தாலும், இரு கட்சிகளிலும் பதவியில் இருக்கும்போது, இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவது இல்லை என்று தமிழக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்..

நீட் தேர்வு விவகாரத்தில் இரு கட்சிகளும் அரசியல் செய்து வருவதாகவும், அதுபோல பேரறி வாளன் விசயத்திலும் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்கவே அரசியல் கட்சிகள் இதுபோன்று வேடம் போடுகிறது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.