சென்னை: வேளச்சேரியில் மழைநீா், வெள்ளநீர் தேங்குவதைத் தடுக்க ரூ.1,400 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை–சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.  சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், டாக்டர் டி.ஜி.எஸ்., தினகரன் சாலையில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கஸ்துாரிபாய் நகர் எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை, பகிங்ஹாம் கால்வாய் கரையில் நடைபாதை, சைக்கிள் பாதை, சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. அதை ஆய்வு செய்த அமைச்சர், தொடர்ந்து பல்வேறு பகுதிகளிளும் ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம், வார்டு–175ல் மியாவாக்கி முறையில் பசுமையான அடர்வனம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் அந்த அடர்வனத்தை இன்று பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து மரம் வளர்ப்பதை ஊக்குவித்தார்.

அண்ணாநகர் மண்டலம், வார்டு – 107, எழும்பூரில், அமைந்துள்ள உயிரி எரிவாயு நிலையத்தின் செயல்பாடுகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  சென்னையைப் பொருத்தவரை மழைநீா் வடிகால் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. மழைக் காலத்தின்போது, தென்சென்னையின் வேளச்சேரி பகுதி பாதிப்படையாமல் இருக்க ரூ.1,400 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தம் விரைவில் விடப்படும்.

சென்னை மாநகரின் வளா்ச்சிக்காக  அதிமுக அரசு கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறுத்தவில்லை. அப்படியான எண்ணமும் திமுக அரசுக்கு இல்லை. அதற்கு மாறாக அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்த பால், கூட்டுறவு சங்க நிா்வாகிகளே இன்னும் தொடருகின்றனா்.

சென்னை மாநகரில் 330 இடங்களில் சாக்கடை நீா் நேரடியாக கூவம், அடையாறுகளில் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாக்கடை நீா் நேரடியாக ஆற்றில் கலப்பதை தடுத்து அந்நீரை சுத்திகரித்து மீண்டும் ஆறுகளில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிங்காரச் சென்னை திட்டத்தில் பக்கிங்ஹாம், அடையாறு, கூவம், கோவளம் நதிகள் சீரமைப்பு, வீடற்றோருக்கு வீடு, தரமான சாலை, மாநகராட்சிப் பள்ளி மேம்பாடு ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிங்காரச் சென்னை திட்டம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாா்.

கொங்குநாடு விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  தமிழகத்தைப் பிரித்து கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று ஒரு சிலரால் சமூகவலைதளங்களில் வேண்டுமென்றே கருத்து பரப்பப்படுகிறது. அவா்களின் எண்ணம் நடைமுறை சாத்தியமற்றது.

அமைச்சரின் ஆய்வின்போது தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் இ.பரந்தாமன், த.வேலு, ஜெ.கருணாநிதி, நா.எழிலன், ஜே.எம்.எச்.அசன் மௌலானா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.