சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல, விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் சில அறிவிப்புகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு உள்ளன.  அதன்படி,  கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 ஆயிரம் வழங்கப்பட்டது. நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மளிகை தொகுப்பு, 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு உள்பட பல அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட  குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது.  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர்  அமைச்சர் பெரியசாமி,  தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும், ஏற்கனவே கூறியது போல் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மக்களின் நலனுக்காக 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியாகும்” என்று தெரிவித்தார்.

அமைச்சரின் தகவல் தமிழக பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.