சென்னை: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அதிமுக அறிவித்து உள்ளது. மேலும், தஞ்சை களிமேடு தேர் பவனியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும்  கழக ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் திருத்தேர் வந்தபோது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து நடைபெற்ற பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகஅரசு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், மத்தியஅரசு சார்பில் பிரதமர் இரங்கல் தெரிவித்து, தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் – ஈபிஎஸ்  இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தஞ்சை களிமேடு தேர் பவனியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் நேற்று (26.4.2022) இரவு, அப்பர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது தேர் பவனி நடத்தப்பட்ட நேரத்தில், தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்திருக்கிறோம். இந்த வேதனைக்குரிய சம்பவத்தில் மேலும் 15 பேர் தீக்காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஓர் இனிய ஆன்மிக நிகழ்வில் களிமேடு கிராம மக்களுக்கு இவ்வாண்டு மாபெரும் துயரம் ஏற்பட்டிருப்பதை சொற்களால் விவரிக்க இயலாது. இந்த சோக சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனப் பிரார்த்திக்கிறோம்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்தனை பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தமிழ் நாடு அரசு விரைந்தும், முழுமையாகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேர்களின் குடும்பங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும்; அதே போல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.