சென்னை: 
திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற போது வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு திருடும் கும்பலைத் தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த முதல் அமைச்சர் ஸ்டாலின்,  வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும்  அறிவித்துள்ளார்.