சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) பறிமுதல் செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும்படையினர், காவல்துறையினர் உதவியுடன் தீவிர கண்காணிப்பிலும், சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு வழங்குவதையும், சட்டவிரோத பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையின் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (ஏப்.14) தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோயம்புத்தூர் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் சேலத்தைச் சேர்ந்த பத்மநாபன் ஜெயராஜ் (43) என்பவரின் நடவடிக்கையில் பறக்கும் படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தொடர்ந்து கண்காணித்த பறக்கும் படையினர், அவரிடம் அதிரடிசோதனை நடத்தினர்.
இதில், அவரிடம் 289 கிராம் எடை கொண்ட 4 தங்கக் கட்டிகளும், கட்டுக்கட்டாக ரூ.7.50 லட்சம் பணமும் இருந்தது தெரிய வந்தது. இவற்றில் தங்கக் கட்டிகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.44.83 லட்சம் ஆகும். மொத்தமாக ரூ.52.33 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அவரை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த நபர், தங்கக் கட்டிகளையும், பணத்தையும் வணிக நோக்கத்திற்காக கொண்டு செல்வதாக கூறிய நிலையில், முறையான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறரது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் மேல் விசாரணைக்காக சென்னை வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், விஜயவாடாவில் இருந்து வந்த ரயிலில் இருந்து பயணிகள் ரூ. 1.25 கோடி பணம், நகை மற்றும் வெள்ளிக்கட்டிகளை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]