சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக அலுவலகத்தில் உள்அறைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை, தற்போது நுழைவு வாயிலுக்கும் சீல்  வைத்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயிலுக்கு  வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில்,  சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வந்து,  அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். இதனால் மோதல், கத்திக்குத்து, காவல்துறை தடியடி என அந்த பகுதி கலவரபூமியாக காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து,  சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கருத்தில் வன்முறையை தடுக்கும் நோக்கில் 146 சட்ட விதியின்படி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவெடுத்தனர்

காவல்துறையின் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் ஓ. பன்னீர்செல்வத்துடன் சீல் வைப்பதற்கான உத்தரவு நகலை அளித்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து  அலுவலகத்தைவிட்டு ஆதரவாளர்களுடன் வெளியேறிய ஓபிஎஸ் சிறிதுநேரம் தர்னாவுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

முதலில் அதிமுக அலுவலகத்தில் உள்ள அறைகளுக்கு மட்டுமே சீல் வைக்கப்பட்டது. தற்போது பிரதான வாயிலுக்கும் கோட்டாட்சியர் வைத்தார். மேலும், அதிமுக அலுவலகம் அருகே சட்டவிரோதமாக கூடினால், 145 தடை உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அதிமுக தலைமை அலுவலகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…