சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாகவும், புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ்-ஐ நீக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக, விரைவில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  கூட்டப்பட்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  புதிய எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வாகவுள்ளதாகவும் அதிமுக  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.