சென்னை:

மாணவர்களிடையே கத்திக்கலாச்சாரம் அதிகரித்துள்ளது,  பொதுமக்களிடையே கடும் அதிருப் தியை ஏற்படுத்திய நிலையில், ரூட் தல மாணவர்களை காவல்நிலையத்துக்கு வரழைத்த அதிகாரிகள், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இனி வன்முறை யில் ஈடுபட மாட்டோம்  உறுதிமொழியும் எழுதியும் வாங்கி உள்ளனர்.

கடந்த வாரம் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் கையாலாகாதனத்தால் தான்,  மாணவர்கள் கத்தியை கையில் எடுத்துள்ளனர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்தநிலையில், ரூட் தல மாணவர்களை வேட்டையாட முடிவு செய்த சென்னை காவல்துறை, கடும் நடவடிக்கையில் இறங்கியது.

இணை கமி‌ஷனர் சுதாகர் தலைமையில் கல்லூரி முதல்வர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்  நேற்று நடைபெற்றது. அப்போது,  கல்லூரி முதல்வர் களுக்கு பல்வேறு அறிவுரைகளும் போலீஸ் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு கல்லூரியிலும், ‘ரூட்’ தல மாணவர்கள் யார் யார் என்பது பற்றி பட்டியலிடப்பட்டு அவர்களை தூக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி, சென்னையில் ஓடும்  17 வழித்தடங்களில் உள்ள  மாநகர பஸ்களில் 90 ‘ரூட்’ தல மாணவர்கள் இருந்து அழிச்சாட்டியம் செய்வது வருவது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை வேட்டையாடும் வேலையில் காவல்துறை இறங்கியது. முதல்கட்டமாக வடசென்னையில் வேட்டை தொடர்ந்தது. இதில், 54 ‘ரூட்’ தல மாணவர்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும், அண்ணாநகர் துணை கமி‌ஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு நேரில் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவர்களிடம், இனி தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி  வாங்கப்பட்டது. இந்த மாணவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற ரூட்தல வேட்டையில்,  செங்குன்றம் பகுதியில் 17 ‘ரூட்’தல மாணவர்கள் பிடிபட்டனர். அனைவரும் மாதவரம் துணை கமி‌ஷனர் ரவளி பிரியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

மீதமுள்ள ரூட்தலைகளையும் பிடித்து எச்சரிக்கை காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.