உலகின் முன்னணி விமான எஞ்சின்கள் தயாரிக்கும் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் ஓசூரில் விமான எஞ்சின் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கவுள்ளது.

ராணுவ விமானங்களுக்கு தேவையான எஞ்சின் பாகங்களை தயாரிக்கும் இந்த நிறுவனத்துக்கு சர்வதேச விண்வெளி உற்பத்தி நிறுவனம் (International Aerospace Manufacturing – IAMPL) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள IAMPL நிறுவனம் அடோர் என்ஜின்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் விமான எஞ்சின்களை ரோல்ஸ் ராய்ஸ் தனது சர்வதேச இராணுவ வாடிக்கையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு விற்பனை செய்யவுள்ளது.

2021 ஏரோ இந்தியா கண்காட்சியின் போது ரோல்ஸ் ராய்ஸ் – இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு தமிழக அரசு இந்நிறுவனத்துக்கு தேவையான இடத்தை அளிக்க முன்வந்ததை அடுத்து இந்த நிறுவனத்தை ஓசூரில் அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தற்போது இந்நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நிலையில் விரைவில் தொழிற்சாலையை கட்டிமுடிக்க தேவையான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.