சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு எதிராக அளித்த புகாரை தயாரிப்பாளர் சி.வி.குமார் நேற்று திடீரென  வாபஸ் வாங்கினார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவருமான அசோக்குமார், கடந்த 21ம் தேதி தனது சென்னை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இவர் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கி இருந்தார். கடனைத் திருப்பிக் கேட்ட அன்புச்செழியன்,  மிகவும் தரம் தாழ்ந்து நடந்துகொண்டதுடன் மிரட்டவும் செய்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதிவைத்திருந்தார் அசோக்குமார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்து, அன்புச்செழியனை தேடி வருகிறார்கள் காவல்துறையினர்.

இந்த நிலையில் அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று திரைப்பட பிரபலங்கள் பேட்டி அளித்தனர். வேறு சில பிரபலங்கள், அன்புச்செழயன் நல்லவர் என்றனர்.

 

இதற்கிடையே, ‘திருக்குமரன் என்டர்டயின்மென்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் சி.வி. குமார்,  அன்புச்செழியன் தரப்பு மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.  தான் தயாரித்து இயக்கியுள்ள ‘மாயவன்’ திரைப்படத்தை வெளியிட அன்புச்செல்வனுக்குச் சொந்தமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றுத்தர வேண்டும் என்றும் கோபுரம் பிலிம்ஸ் வசம் இருக்கும் தன்னுடைய நிதி ஆவணங்களை பெற்றுத்தர வேண்டும் என்றும் சி.வி.குமார் அந்த மனுவில் தெரவித்திருந்தார்.

இந்நிலையில் அவற்றை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் சி.வி.குமாரிடம் ஒப்படைத்தனர்.   இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சி.வி.குமார் நேற்று அறிவித்துள்ளார். மாயவன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் சி.வி.குமார்  தெரிவித்துள்ளார்.