சமயபுரம்:

திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை துளையிட்டு கொள்ளைடியத்துள்ளனர். இதில் காரணமாக  பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.

வங்கியின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதில்  சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் சூறையாடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்கசி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே டோல்கேட் உள்ளது. அந்த பகுதி யில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த பலர் கணக்கு வைத்துள்ளனர். மேலும், விவசாயிகளும், பொதுமக்களும் நகைகளை அடகு வைத்துள்ளனர். பலர் லாக்கரில் நகை, பணம் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் வங்கியில்  நேற்று நள்ளிரவு கொள்ளை நடை பெற்றுள்ளது. வங்கியின் தனி அறையில்  5 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. கேஸ் சிலிண்டர் மூலம் வெல்டிங் வைத்து லாக்கர்களை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

இதற்காக  கொள்ளையர்கள் பயன்படுத்திய வெல்டிங் மெஷின், சிலிண்டர், சுத்தியல், கடப்பாரை போன்றவை சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில்,  லாக்கர்களில் இருந்த ரூ.5 கோடி பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்துள்ளது.

கொள்ளையர்கள்  வங்கியின் பிரதான வாசலை உடைக்க முயற்சித்துள்ளதும், அது பயனளிக்காததால், வங்கியின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கி கொள்ளை குறித்து கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள்  வங்கியில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.