பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜூன் 20 மற்றும் 21 தேதிகளில் கர்நாடகா சென்றார்.

அவரது வருகைக்காக 23 கோடி ரூபாய் செலவில் மொத்தம் சுமார் 14 கி.மீ. நீளத்துக்கு பெங்களூரில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டன.

பெங்களூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் திடீர் பள்ளம் ஏற்பட்டு சாலை உள்வாங்கியது.

பிரதமர் வருகைக்காக சுமார் 6.05 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட இந்த சாலை அவர் வந்து சென்ற மறுநாளே பழுதடைந்ததைத் தொடர்ந்து பெங்களூரு நகர அபிவிருத்தி கழகம் மீது பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே அனைத்து பணிகளுக்கும் 40 சதவீதம் கமிஷன் கேட்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தரமற்ற சாலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து கூறிய அதிகாரிகள் 110 முதல் 140 டிகிரி வெப்பத்தில் சீரான அளவுள்ள ஜல்லி மற்றும் தார் கலந்து போடுவதற்கு பதிலாக 90 டிகிரிக்கும் குறைந்த வெப்பத்தில் தாருடன் மண்ணெண்ணெய் கலந்து போடுவதால் சாலைகள் விரைவில் பழுதடையும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாகவும் விதிகளை மீறி சாலை அமைத்திருந்தால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.