சென்னை:
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நேற்று மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சென்னையில் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி தலைவர்கள்மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை அண்ணாலை மற்றும், மெரினா கடற்கரை சாலை யில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக சென்னையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்பட 3 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகே எதிர்கட்சிகள் ஊர்வலம் சென்றபோது, போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை மீறி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது கூட்டத்தில் இருந்து கல்வீசப்பட்டதில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் குமார் மற்றும் அதிவிரைவுப் படை காவலர் முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவது, திட்டமிட்ட தாக்குதல், ஆயுதங்களால் தாக்குவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியரை ஆயுதங்களால் தாக்குவது போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.