தஞ்சை:

டெல்டா மாவட்ட பகுதியான நீடாமங்கலம் பள்ளி மாணவர்கள் 1300 பேர், தங்களின் படிப்பை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளனர்.

உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,300 பேர் அஞ்சல் அட்டை மூலம்  பிரதமர் மோடிக்கு  உருக்கமான கடிதம் எழுதி உள்ளனர்.

இந்த புதுமையான கடித வேண்டுகோள் குறித்து, மாணவர்கள் கூறும்போது, இந்த பகுதியை சேர்ந்த தங்களது பெற்றோர்கள் விவசாயிகள் என்றும்,  நாங்கள் விவசாயம் செய்ய காவிரி நீர் தேவை என்றனர். காவிரி நீர் வந்தால்தான், விவசாயம் செய்ய முடியும் என்றும்,  அதன்மூலம்கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் எங்களை படிக்க வைத்து வருகின்றனர் என்றனர்.

எனவே, எங்களின் எதிர்காலத்தை கருதி, பிரதமர் நரேந்திரமோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்  என்று உருக்கமாக கூறி உள்ளனர்.