சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை போட சசி அதிமுகவினர் பயப்படுகிறார்கள். இந்த தேர்தலில்  பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் கூறியுள்ளார்.

இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தபிறகு  மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எம்.ஜி.ஆர். கண்டெடுத்த இரட்டை இலை சின்னம் சில சூழ்நிலைகளால் தற்போது முடக்கப்பட்டு உள்ளது. இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்து மீட்டெடுப்போம்.

எம்.ஜி.ஆரின் உண்மையான பக்தர்கள், அம்மாவின் உண்மை விசுவாசியான ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்போம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா அணியினர் பணத்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் பாசத்துடன் நம்மோடு இருக்கிறார்கள்.

இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்துக்கும் பாசத்துக்கும் இடையேதான் போட்டி நடக்கிறது.

சசிகலாவின் படத்தைப் போட்டு ஓட்டு கேட்பதற்கு கூட எதிர் அணியினர் தயங்குகிறார்கள். தோற்று விடுவோமோ என்ற பயத்தில் அவர்கள் திறந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் கூட சசிகலா படத்தை வைக்கவில்லை.

உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் இந்த நேரத்தில் அணி திரள வேண்டும். சசிகலா குடும்பத்தினரின் பிடியில் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வேண்டும். சசிகலா குடும்பத்தினர் இல்லாத அ.தி.மு.க.வை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு ஓ.பி.எஸ். தலைமையில் தான் அணி வகுக்க வேண்டும்.

21 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் நான் அம்மா ஆசியோடு வெற்றி பெறுவேன். அம்மா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். ஓ.பி.எஸ். ஒருவரால்தான் அது முடியும். நிச்சயம் அதை அவர் செய்வார்.

ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் ஆட்சியையும் நாம் அகற்ற வேண்டும்.

குடும்ப ஆட்சியை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர்., தர்மயுத்தம் நடத்தினார். ஆர்.கே. நகர் மக்கள் ஓ.பி.எஸ்.,சை நேசிக்கின்றனர். எம்ஜிஆர்., ஜெய லலிதா கட்டி காத்த குடும்பம் அதிமுக.

சசி குடும்பத்தினரை வெளியேற்றி விட்டு அதிமுகவை கைப்பற்றற வேண்டும். சசி குடும்பத்தி லிருந்து தொண்டர்கள் விலக வேண்டும். குடும்ப ஆட்சிக்கு எதிராகவே நாங்கள் போட்டியிடு கிறோம். சசிகலா வற்புறுத்தலின் காரணமாக தினகரனுக்கு, எம்.பி., பதவியை அளித்தார் ஜெயலலிதா.

இடைத்தேர்தலுக்கு பின் கட்சி, ஆட்சி, சின்னத்தை கைப்பற்றுவோம். ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்குவோம்.

கடந்த 1991க்கு முன்னர் சொத்துவிபரத்தை சசி வெளியிடதயாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

மா.பா.பாண்டியராஜன் கூறுகையில், தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில். சசிகலா அணி சார்பில் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன் களமிறங்குகிறார். ஆனால், ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள எந்தவொரு தேர்தல் அலுவலகத்திலும், போஸ்டர்களிலும் சசிகலா படம் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.