உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வந்த மகாகும்பமேளா நிகழ்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஜனவரி 13 முதல் 45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பாவங்களை போக்க 65.21 கோடி பேர் வந்திருந்தனர்.

இந்தியா மட்டுமன்றி ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து குவிந்தனர்.

இதற்காக 14 மேம்பாலங்கள், 6 சுரங்கப்பாலங்கள், சாலை அகலப்பணி, புதிய சாலைகள் என உ.பி. அரசு மொத்தம் ரூ. 7500 கோடி செலவிட்டது.

இது தவிர, மகாகும்பமேளா நிகழ்ச்சிக்காக மட்டுமே ரூ. 1500 கோடி செலவழித்தது.

இந்த நிலையில், மகாகும்பமேளா நிகழ்வை ஒட்டி உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் அதனை சுற்றி 100 முதல் 150 கி.மீ. சுற்றளவில் உள்ள நகரங்களில் இந்த 45 நாட்களில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி. மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உ.பி. பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அம்மாநில அரசின் $1 டிரில்லியன் டாலர் கனவு விரைவில் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.