சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் சிஏஏ எனப்படும் குடியுரிமை  சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மாதம் 9 ஆம் தேதி (டிசம்பர் 9) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்டநேர விவாதத்துக்கு பிறகு மாநிலங்களவையிலும் இந்த மசோதா 11 ஆம் தேதி (டிசம்பர் 11) நிறைவேறியது.  ஜனவரி 10ந்தேதி 2020ம் ஆண்டு முதல்  அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான அறிவிப்பு மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களிடையே  எதிர்ப்பு எழுந்தது. அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது அரங்கேறிய வன்முறைகளில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுக சார்பில் சென்னையில் பிரம்மாண்ட கண்டன பேரணி நடத்தப்பட்டது. ஆனால், மத்தியஅரசு அதை கண்டுகொள்ளாமல், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

மத்தியஅரசின் இந்த சட்டத்துக்கு எதிராக சில மாநில அரசுகள், சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. அதன்படி, தமிழ்நாட்டிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின வலியுறுத்தி வந்தார். ஆனால், எடப்பாடி அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்துள்ளதால், இந்தகூட்டத்தொடரில், நீட், வோளண் சட்டம், சிஏஏ சட்டங்களுக்கு  எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது.  அதன்படி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிஏஏக்கு எதிராக இன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்து வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் (10, 11, 12 ஆகிய தேதிகள்)  தொடர் விடுமுறை உள்ளதால், இன்று இருமுறை அவை கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  வரும் 13ந்தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. அதனால், இன்று அவை காலை, மாலை என இருமுறை கூடுகிறது.  இன்றைய அமர்வில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, போக்குவரத்து துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை ஆகிய 4 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர். அப்போது, உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை அளிக்க உள்ளனர்.

இதனிடையே, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் முதல்வர் முக.ஸ்டாலின்ல் கொண்டுவரபபட்டு  நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.